Dienstag, 10. Juli 2018

8.தேம்பாவணி -6

 வெண்மை செறிந்த மலரின் அழகு போல் தூயவளாகிய கன்னி
மரியாள் கையில் ஞானம் நிறைந்து மலர்ந்துள்ள மகனை நோக்கும்
பொருட்டு, வானமெங்கும் நெருங்கப் பூத்த அழகு போலத் தாங்கி நின்ற
பல விண்மீன்கள் செறிந்து கிடந்து, அழகுடன் விரிந்த கண்களை
ஒத்திருந்தன.

     மிடைந்த + அலர் - 'மிடைந்தவலர்' என்பது 'மிடைந்தலர்' எனத்
தொகுத்தல் விகாரம் கொண்டது. 'அலர் சேடு கண்' என்பதனை, 'சேடு
அலர் கண்' என மாற்றிக் கூட்டுக.



            31
மனவ ணங்குவ ணங்கடி நாயகன்
மனவ ணங்குவ ணங்கில்வ ருந்தினார்
மனவ ணங்குவ ணங்கலி லாளனு
மனவ ணங்குவ ணங்கும ணங்குமே.

மனவு அணங்கு வணங்கு அடி நாயகன்
மன் அவ் அணங்கு வணங்கு இல் வருந்தினார்,
மன அணங்கு வணங்கல் இல் ஆளனும்,
மனவு அணங்கு வணங்கும் அணங்குமே.


     தன் மனத் துயரம் அடங்குதல் இல்லாத கணவனாகிய சூசையும்,
மணியின் அழகும் தோற்று வணங்கும் தெய்வப் பெண் போன்ற
மரியாளும், நவமணிகள் தம்மிலும் அழகியதென்று வணங்கும் திருவடிகளை
உடைய ஆண்டவன்பால் நிலைகொண்ட அத்துன்பங்கள் குறையாமை
கண்டு வருந்தினர்.


  மன் + அ + அணங்கு - 'மன்னவ் வணங்கு
என வரவேண்டியது,
ஈரெழுத்துக்கள் இடையிட்டுத் தொக்கமையால் தொகுத்தல் விகாரம்


            32

ஆர ணந்தரு மாண்டகை யாகுலக்
கார ணந்தரு கட்புனல் கண்டிடர்
பூர ணந்தரு மார்புபு டைத்தெலா
வார ணந்தரும் வானுறக் கூக்குரல்.

ஆரணம் தரும் ஆண்டகை ஆகுலக்
காரணம் தரு கண் புனல் கண்டு, இடர்
பூரணம் தரு, மார்பு புடைத்து, எலா
வாரணம், தரும் வான் உறக் கூக்குரல். 

   வேதத்தை வகுத்துத் தரும் ஆண்டவனுக்கு உற்ற துயரத்தின்
காரணமாக இவர்கள் இடும் கண்ணீரைக் கண்டு, தாமும் அத்துன்பத்தை
முற்றும் உணர்ந்ததை அறிவிக்கும் முகமாக, அங்குள்ள எல்லாக்
கோழிகளும், தம் மார்புகளைச் சிறகுகளால் புடைத்துக்கொண்டு,
வானத்தை எட்டுமாறு கூக்குரல் எழுப்பிக் கூவும்.


              33
பேர்ந்த தன்பெரு மானடை பீழைவா
னோர்ந்த தன்மையு ளைந்தழு தாலென
வார்ந்த தண்பனி தாரையின் மல்கியன்
றார்ந்த பைந்தழைக் காவழு தாயதே.
பேர்ந்த தன் பெருமான் அடை பீழை வான்
ஓர்ந்த தன்மை உழைந்து அழுதால் என,
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று,
ஆர்ந்த பைந் தழைக் கா அழுது ஆயதே.
   
     தன்னை விட்டுப் பெயர்ந்து மண்ணுலகம் அடைந்த தன் ஆண்டவன்
அடையும் துன்பத்தை வானம் உணர்ந்து கொண்ட தன்மையாக வருந்தி
அழுதாற்போல, அன்று வடித்த குளிர்ந்த பனியாகிய கண்ணீர் மழைத்
தாரைபோல் மிகுதியாகப் பெய்து, நிறைந்த பசுமையான இலைகளைக்
கொண்டுள்ள காடும் அழுதது போல் ஆயிற்று.

     பசுமை + தழை - பைந்தழை.

             34
கறாக றாவெனக் காடைக லுழ்ந்தன
ஞறாஞ றாவெனத் தோகைக ணைந்தழும்
புறாகு றாவுத லோடிவர் போதலா
லறாந றாப்பொழி லாரழு மோதையே.
கறாகறா எனக் காடை கலுழ்ந்தன;
ஞறாஞறா எனத் தோகைகள் நைந்து அழும்;
புறா குறாவுதலோடு, அவர் போதலால்,
அறா நறாப் பொழில் ஆர் அழும் ஓதையே.


     இவர்கள் தம்மைவிட்டுப் பிரிந்து போதலால், காடைகள்
கறாகறாவென்று அழுதன; மயில்கள் வருந்தி ஞறாஞறாவென்று அழும்;
புறாக்கள் குறாகுறாவென்று அழுவதனோடு, அவையும் சேர்ந்து, என்றும்
அறாத தேனைக்கொண்டுள்ளசோலை, நிறைந்த ஓசையோடு அழும்.

     ஒப்பு நோக்குக 1 : 45.


     35
கிளிய ழக்குயில் கேட்டழத் தேனுணா
தளிய ழச்சிறை நைந்தழ வாவென
வளிய ழத்துயர் மல்கிவ னத்தெலா
வுளிய ழத்தக வோரழ வேகினார்.
கிளி அழ, குயில் கேட்டு அழ, தேன் உணாது
அளி அழ, சிறை நைந்து அழ, ஆ! என
வளி அழ, துயர் மல்கி வனத்து எலா
உளி அழ, தகவோர் அழ ஏகினார்.
 
     கிளிகள் அழவும், அதனைக் கேட்டுக் குயில்கள் அழவும், தேனை
உண்ணாமல் வண்டுகள் அழவும், அன்னங்கள் நைந்து அழவும், ஆ! என்று
காற்று அழவும், துயரம் மிகுந்து அவ்வனத்தின் எல்லா இடங்களும்
அழவுமாக, பெருமை வாய்ந்த அவர்கள் அழுது கொண்டே சென்றனர்.
'சிறை' என்பது சிறகுகளை உடைய அன்னத்திற்குக் காரண இடுகுறிப் பெயர்.



           36
கான்ம றந்தன காமல ரன்னதே
தேன்ம றந்தன தேனின மன்னதே
பான்ம றந்தன மான்பற ழன்னதே
யான்ம றந்தன தம்பிள்ளை யன்னதே.
கான் மறந்தன கா மலர், அன்னதே;
தேன் மறந்தன தேன் இனம், அன்னதே;
பால் மறந்தன மான் பறழ், அன்னதே;
ஆன் மறந்தன தம் பிள்ளை, அன்னதே.


     அதுபோலவே, காட்டிலுள்ள மலர்கள் வாசனை வீச மறந்தன;
அதுபோலவே, வண்டினங்கள் தேனை உண்ண மறந்தன; அதுபோலவே,
மான் குட்டிகள் பால் அருந்த மறந்தன; அதுபோலவே, பசுக்கள் தம்
கன்றுகளை மறந்தன.



37
சுருதி யேந்துசு தற்றுமிப் பேனெனக்
கருதி யேந்துகு ரோதங்க தித்தெனப்
பருதி யேந்துப டம்பட ராமுனர்
குருதி யேந்துகு ணக்குசி வந்ததே.

சுருதி ஏந்து சுதன் துமிப்பேன் என,
கருதி ஏந்து குரோதம் கதித்து என,
பருதி ஏந்து படம் படரா முனர்,
குருதி ஏந்து குணக்கு சிவந்ததே.


     வேதத்தைத் தாங்கிக் கொண்டிருந்த அந்த மகனைக்
கொல்லுவேனென்று எரோதன் திட்டமிட்டுத் தன் மனத்தில் கொண்டிருந்த பகையை வானம் கண்டு சினந்தாற்போல, ஆதவன் 

தாங்கிக் கொண்டிருந்த இருளாகிய போர்வை விலகுவதற்கு முன்னரே, இரத்தம் பாய்ந்த தன்மையாய் அதன் முகமாகிய கீழ்த்திசை சிவந்தது.பகைக்கு மனமும், சினத்திற்கு வானமும், போர்வைக்கு இருளும், கிழக்கிற்கு முகமும் வருவித்து உரைக்கப்பட்டன.

சுதன் + துமிப்பேன் என்பது, 'சுதனைத் துமிப்பேன்' என்ற பொருளில், 'சுதற்றுமிப்பேன்' என 
நின்றது.


               38
முழவெ ழுந்தொனி யொப்பமுந் நீரொலி
யெழுவெ ழுந்துபொ ரக்கதி ரெய்சரம்
விழவெ ழுந்தவெய் யோன்சிவந் தெய்திவா
னழவெ ழுந்துய ராற்றில தோன்றிற்றே.
முழவு எழும் தொனி ஒப்ப முந்நீர் ஒலி
எழ, எழுந்து பொரக் கதிர் எய் சரம்
விழ எழுந்த வெய்யோன் சிவந்து எய்தி, வான்
அழ, எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே.


      அப்பகைவன் மேல் எழுந்து போர் புரிய எய்யும் கதிராகிய அம்புகள் அழுவதைக் கண்டு, தானும் எழுந்த துயரத்தை ஆற்ற மாட்டாததுபோல்


              39
பானும் பானொடு பாசறை பட்டழும்
வானும் வானொடு மண்ணுமி ரங்கின
வேனு மேதுமு ணர்கில மாக்களுங்
கோனுங் கோடணை கொண்டிரங்
காயினார்.


பானும், பானொடு பாசறை பட்டு அழும்
வானும், வானொடு மண்ணும் இரங்கின
வேனும், ஏதும் உணர்கில மாக்களும்
கோனும் கோடணை கொண்டு இரங்காயினார்.

     
கதிரவனும் கதிரவனோடு கூடித் துன்பப்பட்டு அழும் வானமும், அவ்வானத்தோடு சேர்ந்து மண்ணுலகமும் இவர் நிலை கண்டு இரங்கினவேனும், ஒன்றும் உணர்தல் இல்லாத கீழ் மக்களும் எரோதன் என்ற மன்னனும் மட்டுமே கொடுமை கொண்டு இரங்காதிருந்தனர்.
     
இரங்கார் ஆயினார் என்பது 'இரங்காயினார்' என்று இடையே
குறைந்து நின்றது.

பைதிர நீங்கு படலம் முற்றும்